ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நாடுகள் சீரழிப்பது எப்படி? உங்கள் சிந்தனைக்கு!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க வேண்டுமா? அல்லது சீரழிக்க வேண்டுமா? வேறொன்றும் செய்ய வேண்டாம், கொஞ்சம் கள்ள நோட்டுக்களை அச்சடித்து மக்கள் மத்தியில் புழங்க விட்டால் போதும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு விடும். நிதிநிலை சரிந்து விடும். அதனால்தான் பகை நாடுகள் எதிரி நாட்டின் கரன்சியை தங்கள் நாட்டில் அச்சடித்து விநியோகிக்கின்றன. அப்படிதான் பாகிஸ்தானில் இருந்து எராளமான 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் வருகின்றன. எப்போதும் ஒரு நாட்டின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளே கள்ளப் பணமாக அச்சடிக்கப் படுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறது. கள்ள நோட்டை ஒவ்வொரு முறை மாற்றும் போதும் அதில் நிறைய 'ரிஸ்க்' உள்ளது. 500 ரூபாய் என்றாலும் 50 ரூபாய் என்றாலும் ஒரே 'ரிஸ்க்'தான். பெரும் தொகையுள்ள பணத்தை ரிஸ்க் எடுத்து மாற்றி விட்டால் லாபம் அதிகம். அதனால்தான் கள்ள நோட்டுகள் பெருந்தொகை உள்ளதாகவே உள்ளன.

கள்ள நோட்டுக்கு மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்துக்கும் பெரும் மதிப்புள்ள நோட்டுக்கள் துணை போகின்றன. இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே  500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பெரிதாக பொருளாதரத்தில் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இன்றைக்கும் 70 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அப்படியொரு ஏழை நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும். மொத்த ரூபாய் நோட்டுக்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 76.5 % உள்ளன. இந்த நோட்டுகளில் 70% மேல் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 350 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. 100 கோடிக்கு மேல் 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது ஒரிஜினல் நோட்டுக்களின் புள்ளி விவரம். கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. அது தனி கணக்கு. அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. என்பது பெருமைப்படக்கூடிய விஷயமில்லை. அது பயன்படும் விதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நோட்டுகளை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கும் ஏழைகள் அல்ல. இந்த நோட்டுக்கள் ஊழலுக்கு மிகவும் வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் செய்கின்றன. கறுப்புப் பண பரிமாற்றத்துக்கும், வெளிநாடுகளுக்கு பணத்தைக் கடத்துபவர்களும் இந்த நோட்டுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதை எடுத்துச் செல்வது எளிது.  உதாரணமாக ஹவாலா பணம் ஒரு கோடி ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களாக அதை எடுத்துச் சென்றால், அதன் எடை 50 கிலோ
வரை இருக்கும். அதையே 500 ரூபாய் நோட்டுக்களாக கொண்டு சென்றால் வெறும் 2 கிலோ தான் இருக்கும். 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றால்,
ஒரு கிலோ வுக்கு சற்று கூடுதலாக இருக்கும். பெரிய மதிப்பிலான நோட்டுக்களோடு ஒப்பிடும்போது சிறிய மதிப்பிலான நோட்டுக்களை எடுத்துச் செல்வதற்கும், கண்ணில் படாமல் தப்பிப்பதற்கும் ஏற்படும் பிரச்சனைகள் மிக மிக அதிகம். நியாயமான முறையில் நடைபெறும் பணப் பரிமாற்றத்திற்கு பெரும்பாலானவர்கள் காசோலை, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளையே பயன்படுத்துகிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்களும் சட்ட விரோத செயல்களை செய்பவர்களும், பினாமி பெயரில் சொத்து வாங்குபவர்களும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பணம் வழங்குவதற்குமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகிறார்கள். இதே போன்ற செயல்களுக்கு குறைந்த மதிப்பிலான நோட்டுக்களை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல் என்பது அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியும். அதனால்தான் பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அரசு திரும்பப் பெறும்போது, கறுப்பு பொருளாதரத்திற்கு பெரிய அடி விழுகிறது. . பெரும்பகுதி ஒழிக்கப்பட்டு விடுகிறது. வெளிநாடுகள் பலவற்றில் பெரிய மதிப்பிலான நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருகாலத்தில் 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நோட்டுகளை எல்லாம் ஒழித்துவிட்டார்கள். இப்போது 100 மதிப்புள்ள நோட்டுக்கள்தான் அங்கு அதிக மதிப்புடைய நோட்டுக்கள்.


இதனால் அந்த நாடுகளில் நிலவிவந்த சட்டவிரோதமான பணப்புழக்கம் குறைந்தது. ஆனால் நமது நாட்டில் நிலைமையே வேறு. கடந்த 10 ஆண்டுகளில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது 17 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவின் கிராமங்களில் இன்றைக்கும் 500 ரூபாய் நோட்டுக்களைப் பார்ப்பது குதிரைக்கொம்புதான். 1000 ரூபாய்க்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள்தான். ஆனால் 500 ரூபாய் தாராளமாகக் கிடைக்கும் வேளையில் சிறிய மதிப்பிலான ரூபாய்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி அதிக மதிப்பிலான நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் இப்போது 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது நிதி அமைச்சகத்தின் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் 500 ரூபாய் நோட்டுக்களில் 60.74 சதவிகிதம் கள்ள நோட்டுகள். 1000 ரூபாய் நோட்டுகளில் 4 நோட்டில் ஒன்று கள்ள நோட்டாகும். கொஞ்சம் பணக்காரர்களும், நிறைய ஏழைகளும் கொண்ட ஒரு நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தேவையற்றவை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உண்மைதான். சாமான்ய மக்களைவிட கருப்பு பண முதலைகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும், சட்டவிரோதிகளுக்கும், பணக்கடத்தலுக்கும்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதன் மூலம் கறுப்பு பொருளாதாரத்தையும், கள்ள நோட்டையும் ஒழித்து வளமான இந்தியாவை உருவாக்கலாம்.



ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நாடுகள் சீரழிப்பது எப்படி? உங்கள் சிந்தனைக்கு!

தில்லுமுல்லு சாமியார் ஆவது எப்படி? - கோடீஸ்வர யோகம்